அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு தமிழகம் அமைதியாக உள்ளது முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதம்


அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு தமிழகம் அமைதியாக உள்ளது முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதம்
x

தமிழகத்தில் அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு மாநிலம் அமைதியாக உள்ளது என திருப்பத்தூரில் நக்சலைட்டு தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதத்துடன் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

தமிழகத்தில் அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு மாநிலம் அமைதியாக உள்ளது என திருப்பத்தூரில் நக்சலைட்டு தாக்குதலில் உயிரிழந்த 4 போலீசாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி.தேவாரம் பெருமிதத்துடன் கூறினார்.

நக்சலைட் தாக்குதலில் 4 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த நக்சலைட்டு சிவலிங்கம் என்பவரை கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்து சென்றனர்.திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் சென்றபோது, நக்சலைட்டு சிவலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து ஜீப்பில் இருந்து தப்பி சென்றார். இதில் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு ஆதிகேசவேலு, போலீஸ்காரர்கள் ஏசுதாஸ் மற்றும் முருகேசன் ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

நேற்று 42-வது ஆண்டாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 30 முறை சுட்டு வீரவணக்கம் செலுத்தினர். அப்போது சோக கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், '' இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போதும் நக்சலைட் ஊடுருவல் காணப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து தீவிரவாத செயல்களும் தடுக்கப்பட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக உள்ளது. தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் என் உயிர் இருக்கும் வரை நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்'' என்றார்.

கலெக்டர், போலீஸ் அதிகாரிகள்

தொடர்ந்து கலெக்டர் அமர்குஷ்வாஹா, வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீஸ் சூப்பிரண்டுகள் பி.பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) ராஜேஷ் கண்ணன் (வேலூர்) தீபா சத்யன் (ராணிப்பேட்டை) கார்த்திகேயன் (திருவண்ணாமலை), கியூபிராஞ்ச் போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மா, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர் லட்சுமி, எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் விஜயா அருணாச்சலம், திருமதி திருமுருகன், சத்யாசதீஷ், ராஜா ராணி தாமோதரன், தொழிலதிபர் வாஹித், கந்திலி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆறுமுகம், தி.மு.க. நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்பட முன்னாள் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story