வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருந்துகள் தயாராக உள்ளது


வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருந்துகள் தயாராக உள்ளது
x

அய்யம்பேட்டை அருகே வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறினார்.

வெள்ள பாதிப்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.செல்வவிநாயகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கை பார்வையிட்ட அவர் தொடர்ந்து இந்த பகுதியில் குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படுகிறதா? என்று பரிசோதனை செய்தார். மேலும் இந்த கிராமத்தில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாமை ஆய்வு செய்து அங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டார்.

உடல்நல பாதிப்பு

பின்னர் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் மற்றும் கிராம மக்களிடம் இந்த பகுதிக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர்.செல்வவிநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-வெள்ளம் பாதித்த கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என நாமக்கல்லில் தொடங்கி ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறோம்.

வாகனங்கள் தயார்

தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம். கர்ப்பிணி பெண்களை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல தேவையான வாகனங்களை தயார் நிலையில் உள்ளது.இந்த பகுதியில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து பொது மக்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்கள். தேவையான அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அவருடன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். நமச்சிவாயம், மருத்துவ அலுவலர்கள் தீபக், சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story