உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்


உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்
x

உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா ரவி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

பழனிவேலு:- இடும்பாவனம் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு வகுப்பறை மட்டுமே உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தரவேண்டும். இடும்பாவனம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு நிரந்தர டாக்டர் நியமனம் செய்யவேண்டும்.

சாலைகளை சீரமைக்க வேண்டும்

தேவகி:- அம்மலூரில் உள்ள பழுதடைந்த பஸ் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ள சோத்திரியம் சாலை, குமாரபுரம் சாலை, அம்மலூர் வடக்குதெரு சாலை, புதுத்தெரு சாலை, கைலாச தெரு சாலை, மஞ்சுக்கோட்டகம் சாலை, ஜவகர் தெரு சாலை ஆகியவைகளை சீரமைக்க வேண்டும்.

ராஜா:- ஓவரூர் வெள்ளகுளம் சுடுகாடு சாலை மற்றும் கொட்டகை அமைத்து தர வேண்டும், சிலாக்கரை சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும், வடக்கு தெரு சாலை மற்றும் கொட்டகை அமைத்து தர வேண்டும்.

திறக்கப்படாத கிராம சந்தை

ரோஜாபானு:- எனது பகுதியில் உள்ள சிறு சிறு சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும், சிறுபனையூர் பகுதியில் சுடுகாடு கொட்டகை அமைத்து தரவேண்டும்.

மோகன்:- எனது பகுதியில் ஏராளமான சாலைகள் மழையில் சேதம் அடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். ஆலங்காடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கிராம சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சுமதி:-வெள்ளாந்தாங்கி திடலில் மயான கொட்டகை அமைக்க வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

ஜாம்பை கல்யாணம்:- , தெற்கு காடு முதல் தர்மகோவில் வரையிலான சாலையை செப்பனிட்டு சரி செய்ய வேண்டும். தெற்கு வெள்ளாதிகாடு சாலையை செப்பனிட்டு சரி செய்ய வேண்டும்

கனியமுதா ரவி(தலைவர்):- உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன், உறுப்பினர்கள் அனிதா, ராதா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலர் கார்த்தி நன்றி கூறினார்.


Next Story