அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஆரணியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆரணி
தமிழக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்.
அதற்கு ஒரு சில காரணிகள் இல்லை, பூர்த்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பதில் அளித்தார்.
இது சம்பந்தமாக ஆரணியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆரணி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பி.நடராஜன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க சில காரணிகள் குறைவாக இருப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறி உள்ளார்.
அவற்றை அரசால் நிவர்த்தி செய்ய வேண்டிய பணிகள் குறித்து நினைவூட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது, திருவண்ணாமலை கலெக்டர் ப.முருகேசை சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வையும் சந்தித்து தொடர்ந்து சட்டசபை கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.