சிறுமியிடம் கருமுட்டை எடுத்ததாக குற்றச்சாட்டு: தனியார் ஆஸ்பத்திரிக்கு வைக்கப்பட்ட 'சீலை' அகற்ற வேண்டும்
சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஈரோட்டில் உள்ள சுதா மகப்பேறு மற்றும் கருத்தரித்தல் ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அந்த ஆஸ்பத்திரியின் ஸ்கேன் மையத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் அந்த ஆஸ்பத்திரியில் புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது. சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை 15 நாட்களில் 'டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும். கருத்தரித்தல் ஆஸ்பத்திரியின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுதா ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
குற்றச்சாட்டு இல்லை
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, "சட்டரீதியாக உரிய காரணங்களை தெரிவிக்காமல் 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரி மீது இதற்கு முன்பு எந்தவொரு குற்றச்சாட்டும் ஏற்பட்டது இல்லை" என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் கூறியதாவது:-
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல தற்போதுதான் இந்த ஆஸ்பத்திரியின் குட்டு அம்பலமாகியுள்ளது. சட்டவிரோதமாக 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை எடுத்து அந்த மையம் வணிக ரீதியில் விற்பனை செய்துள்ளது.
போலி ஆதார்
இதற்காக அந்த சிறுமியின் வயதை 27 என மாற்றியும், சிறுமியின் ஆதார் அட்டையையும் போலியாக தயாரித்தும் மோசடி செய்துள்ளனர். இது அப்பட்டமான விதிமீறல். பொதுநலன் கருதி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, அதன்பிறகு நடவடிக்கை எடுத்தால் அதற்குள் அவர்கள் ஆதாரங்களை அழித்து விடக்கூடும். எனவே 'சீலை' அகற்ற உத்தரவிடக்கூடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குற்றச்சாட்டு குறித்து ஆஸ்பத்திரி தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே, அதன் பதிவை தற்காலிகமாக ரத்து செய்ய முடியும்.
ரத்து
ஆனால், என்ன காரணத்துக்காக பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கவில்லை. எனவே, ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறேன். ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்டுள்ள 'சீலை' அகற்ற வேண்டும். எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதிய அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.