பணிகள் சீராக நடைபெறவில்லை என்று கூறிபெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையர் புனிதன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் எழுந்து 30 வார்டுகளிலும் பணிகள் சீராக நடைபெறவில்லை என்று கூறினர். மேலும் நகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள் கூறுவதை கேட்காமல் அலட்சியம் செய்வதால் அவரை கண்டிப்பதாக கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த வெளிநடப்பு போராட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அ.ம.மு.க. பா.ம.க. கவுன்சிலர்கள் ஈடுபட்டனர். 22 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தலைவர் அறிவித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் மட்டும் தங்களது இருக்கையில் அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 22 கவுன்சிலர்களும் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர்.