நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியுடன் கூட்டணி; டிடிவி தினகரன்
அ.ம.மு.க. ஒரு மாநில கட்சி. எனவே பிரதமரை உருவாக்கிற முயற்சியில் அணிலை போன்ற செயல்பாட்டில் இருப்போம் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில் கூறியதாவது;-
தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு பற்றி சந்தி சிரிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. தி.மு.க. அரசுக்கு இருக்கும் ஒரே வேலை அனைத்து சினிமா படங்களை ரிலீஸ் செய்வது. மீண்டும் பழையபடி அட்டூழியத்தில் இறங்கிவிட்டார்கள். இதுதான் கடைசி வாய்ப்பு. இனியெல்லாம் தாங்காது என இறங்கி அராஜகம் செய்கிறார்கள். இவருக்கு இவரு அப்பா தேவலையேப்பா... என்று விமர்சிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் திராவிட மாடல்... திராவிட மாடல்... என்கிறார்கள். நாங்களெல்லாம் பாகிஸ்தானில் இருந்தா வந்திருக்கிறோம். இதையெல்லாம் கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் எனும் 2 தேசிய கட்சிகள் தான் இருக்கிறது. பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கிற சக்தி இவர்களிடம் தான் இருக்கிறது. அ.ம.மு.க. ஒரு மாநில கட்சி. எனவே பிரதமரை உருவாக்கிற முயற்சியில் அணிலை போன்ற செயல்பாட்டில் இருப்போம். எனவே 2 தேசிய கட்சியில் ஏதாவது ஒரு கட்சியுடன் நாம் கூட்டணி அமைப்போம். அது உறுதி. சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் தவறு இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தேன். உடனே அதையும் விமர்சிக்கிறார்கள். என்ன செய்வது?" என்றார்.