208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4.14 கோடி ஒதுக்கீடு; மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்


208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4.14 கோடி ஒதுக்கீடு; மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
x

நெல்லை மாவட்டத்தில் 208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4.14 கோடி ஒதுக்கீடு செய்து மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4.14 கோடி ஒதுக்கீடு செய்து மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று காலையில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வலட்சுமி முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், 'வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்' என்றார்.

ரூ.4.14 கோடி ஒதுக்கீடு

கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 9 யூனியன்களில் வள்ளியூர், ராதாபுரம், அம்பை ஆகிய 3 யூனியன்களை தவிர மீதம் உள்ள யூனியன்களில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 208 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.4 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், பொதுநிதியில் இருந்து 44 பணிகள் மேற்கொள்ள ரூ.3 கோடியே 36 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.


Next Story