தேவாலய புனரமைப்பு பணிகளுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு
தேவாலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
தேவாலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் ஆய்வு கூட்டம் நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும்திட்டங்கள், தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் வழங்கும் நலத்திட்ட உதவி, முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள், டாம்கோ கடனுதவி திட்டம், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது:-
ரூ.6 கோடி ஒதுக்கீடு
சிறுபான்மையின மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கி மகளிர் திட்டத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு, அதன் பிறகு கடனுதவிகள் வழங்கி வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். டாம்கோ கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்களுக்கு குழுக்கடன், கல்விக்கடன் மற்றும் பொது கடன் ஆகிய கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவாலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்திகொள்ள வேண்டும். மேலும் அடக்க ஸ்தலம் தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதற்காக அரசு நிலம் அல்லது தனியார் நிலத்தை தேர்வுசெய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், அனைத்து தாசில்தார்கள், சிறுபான்மையினர் நல சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.