பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
ஆய்வு கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றியக்குழு தலைவர் மல்லி ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னுரிமை
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அனைத்து கிராம மக்களையும் சென்றடைய வேண்டும். 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர், சாலை, தெரு விளக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிதி ஒதுக்கீடு
அதன்பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி அளவுக்கு முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி நிலவும் சூழ்நிலையிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அனைத்து பள்ளி கட்டிடங்களும் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.