மலை மாடுகள் மேய்வதற்கு இடம் ஒதுக்கீடு
மலை மாடுகள் மேய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மலை மாடுகள் மேய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் கலெக்டர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளதால் எங்கள் பிரச்சினைகள் தெரியும் நிலையில் அவற்றிற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக விஜய முருகன், ராமச்சந்திர ராஜா, முருகன் உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன்படி மாவட்டத்தில் வனத்துறையினர் வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்தும், மலை மாடுகள் மலைப்பகுதியில் மேய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தருவது குறித்தும் நடவடிக்கை எடுக்க கூறும் போது வனத்துறையினர் இதுபற்றி தீர்வு காண மறுக்கும் நிலை உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து ரூ. 40 வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொப்பரை தேங்காய் வேளாண் விற்பனைக்குழு வத்திராயிருப்பிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மேலும் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகை கிடைப்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரினர்.
வேப்பங்குளம் மற்றும் அழகாபுரி தொடக்க கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய சங்கங்களில் நகை இல்லாமல் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலன், அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் மட்டும் அளிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ராஜலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.