வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது; கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது; கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 6 May 2023 2:30 AM IST (Updated: 6 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதை அடுத்து கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி

பெரியகுளம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவி உள்ளது. பெரியகுளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, குளித்துவிட்டு செல்வார்கள். கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யும்போது நீர்வரத்து இருக்கும்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த மாதம் 27, 28-ந் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதன்காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் நேற்று கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். ஒருவாரத்திற்கு பிறகு குளிக்க அனுமதி அளித்ததால் கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story