மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி, காலையில் திடீர் தடை: படகுகளில் அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள்
கடலூரில் நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கிய நிலையில் நேற்று காலை திடீரென தடை விதிப்பதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடலுக்குள் சென்ற மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினார்கள்.
கடலூர்,
மாண்டஸ் புயலால் கடல் காற்று அதிகமாக வீசும் என்றும், கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம், மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 6-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
இந்த நிலையில் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததும் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடிக்க செல்வதற்கான தடை விலக்கி கொள்ளப்படுவதாக மீன்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
புதிய அறிவிப்பு
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை என மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தொடங்கினர்.
இதற்கிடையில் நேற்று காலை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டனர். அதில், வங்க கடல் பகுதியில் கடல் காற்றானது 70 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும், இன்று (நேற்று) மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கடலில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் யாரும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சென்னை, ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த அறிவிப்பை மீனவர்கள் தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி
மீன்வளத்துறையின் இந்த புதிய அறிவிப்பால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். இருப்பினும் கடற்கரையோரம் மீன்பிடிக்க சென்ற பைபர் படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
நேற்றுடன் தொடர்ந்து 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று முதல் மீன்பிடிக்க செல்லலாம்
இதற்கிடையே நேற்று மாலையில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், வானிலை எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டதால், 12-ந்தேதி (அதாவது இன்று முதல்) அனைத்து வகை படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.