கிரிவல பக்தர்களுக்கு சிறுதானியங்களால்செய்யப்பட்ட அன்னதானம்
திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட அன்னதானத்தை வழங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட அன்னதானத்தை வழங்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சிறுதானிய உணவு
சிறுதானியத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய அரசு 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
அதனை தொடர்ந்து சிறுதானிய உணவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் வகையிலும் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அன்னதானம்
கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களிடம் சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் வகையில் வழக்கமாக உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்கும் 15 குழுவினரிடம் சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் அன்னதானமாக வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் சாமை தயிர் சாதம், குதிரைவாலி தயிர் சாதம், ராகி கஞ்சி, ராகி அல்வா, திணை சாம்பார் சாதம், வரகு கஞ்சி, வரகு தயிர் சாதம், வரகு சாம்பார் சாதம் போன்ற 15 வகையான சிறுதானியத்தினால் செய்யப்பட்ட உணவுகள் அன்னதானமாக வழங்கப்பட்டது. சுமார் 2½ லட்சம் பக்தர்களுக்கு சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.
சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் தயார் செய்யும் மற்றும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யும் பணியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அன்னதான குழுவினருடன் மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கையராஜா, இளங்கோவன், சுப்பிரமணி உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றினர்.