வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம்


வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம்
x
தினத்தந்தி 24 Aug 2023 2:45 AM IST (Updated: 24 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாஸ்து பூஜை, ரக்ஸாபந்தனம், யாகசாலை பிரவேசம், ஹோமங்கள் ஆகியவை நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 8 மணிக்கு வேதபாராயணம், பூர்ணாகுதி, கோபூஜை ஆகியவை நடந்தது. அதையடுத்து காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா...! அரோகரா...! என பக்தி பரவசத்தில் சரண கோஷங்களை எழுப்பினர். பின்னர் மூலவர் பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதில் வேம்பார்பட்டி, கோபால்பட்டி, அய்யாபட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகனை சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என். கண்ணன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிகரன், வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் கந்தசாமி, துணை தலைவர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அரவிந்தன் செய்திருந்தார்.


Next Story