கறவை மாடுகளுடன், பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபு முன்னிலை வகித்தார். பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 51 ரூபாயும் அறிவிக்க வேண்டும். பால் ஊக்கத்தொகை, போனஸ் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். ஆவினில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சாலை மறியல்
இதனைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், துணைத் தலைவர் வீரபத்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கறவை மாடுகளுடன் கிருஷ்ணகிரி- வாணியம்பாடி சாலையில் திடீரென கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார், சாலை மறியலில் ஈடுபட்ட 81 பேரை கைது செய்து, பஸ் நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.