அலுவலகப்பணிகளுடன், ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை
அலுவலக பணிகளுடன், ஆய்வு பணிகளையும் மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அலுவலக பணிகளுடன், ஆய்வு பணிகளையும் மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிலப்பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர்; உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து 421 மனுக்கள் பெறப்பட்டது. இன்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசராணை நடத்தி தகுதி இருப்பின் விரைந்து நடவடடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நடவடிக்கை
அப்போது கலெக்டர் பேசுகையில் அரசு அதிகாரிகள் தங்கள் துறைசார்ந்த ஆய்வுகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். நிறைய அதிகாரிகள் ஆய்வு நடத்துவதே இல்லை. குறிப்பாக கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, கூட்டுறவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நீர்வளம், பொதுப்பணி உள்ளிட்ட துறை அதிகாரிகள் தங்கள் துறைகளில் ஆய்வு நடத்துவதாக தெரியவில்லை. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகள் அலுவலகப்பணிகளுடன், ஆய்வுப்பணிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்,
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தினர் 8 பேருக்கு காப்பீடு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
மீட்டுத்தர வேண்டும்
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வழங்கிய மனுவில் ஆண்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள சக்கோஜி ஏரியில் இருந்து வாத்தியார்குட்டை ஏரி, பாலமுத்து கவுண்டனூர் ஏரி, எட்டிகுட்டை ஏரி, கவணன் ஏரி, ஜலேரி ஏரி, எகிலேறி ஏரி ஆகிய ஏரிகளில் நீர்வரத்து கால்வாய் தூர்ந்துள்ளதால் தண்ணீர் அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் பாய்ந்து பயிர் வகைகள் நீரில் மூழ்கி வருகின்றன. எனவே கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஜோலார்பேட்டை ஒன்றியம், சின்ன பொன்னேரி பகுதியைச்சேர்ந்த கோவிந்தராஜ் என்ற முதியவர் அளித்த மனுவில், என் மகன்கள் நான் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை, என்னை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு என்னையும், என் மனைவியையும் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர். வயதான காலத்தில் கூலி வேலை செய்து என் மனைவியை காப்பாற்றி வருகிறேன். எனவே, என்னை ஏமாற்றி வாங்கிய சொத்துக்களை என் மகன்களிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என கூறியிருந்தார்.
நெல் விதைகள்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ராஜாபெருமாள் அளித்த மனுவில், மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 10 லட்சம் பனை விதைகளை நட வேண்டும். அதேபோல, பாரம்பரிய மிக்க அம்மன் வகை நெல் விதைகளை வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.