பெற்றோருடன், மாணவர்கள் போராட்டம்
எந்தவித அறிவிப்பும் இன்றி பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் கீழ்வேளூர் அருகே பெற்றோருடன், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கல்:
எந்தவித அறிவிப்பும் இன்றி பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் கீழ்வேளூர் அருகே பெற்றோருடன், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேறு இடத்திற்கு பள்ளி மாற்றம்
கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சி வடக்கு தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு உள்ள இந்த பள்ளியில் 104 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர், கல்வி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
பெற்றோருடன், மாணவர்கள் போராட்டம்
அப்போது பள்ளி பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயகூட கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது என்றும், மாணவர்களை அங்கு அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.
எந்தவித அறிவிப்பும் இன்றி பள்ளி வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குழந்தைகளை பழைய பள்ளி முன்பு அமர வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சமுதாயகூட கட்டிடம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருப்பதாகவும், கழிவறை வசதியும் இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பள்ளியின் வாசலிலே காத்திருந்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்வு முடியும் வரை பழைய கட்டிடத்திலேயே பள்ளி இயங்கும் என்றும், தேர்வு முடிந்தவுடன் தற்காலிக கொட்டகை அமைத்து கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.பின்னர் பூட்டப்பட்டிருந்த பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.