ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமியை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது


ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமியை தரிசிக்க கூடுதல் நேரம்  ஒதுக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமியை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க புதன்கிழமை நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஏரல்:

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் சயன திருக்கோலத்தில் சுவாமியை தரிசிக்க கூடுதல் நேரம் அளிக்கப்படும் என ஏரல் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்த பா.ஜ.க. உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பா.ஜ.க.வினர் எதிர்ப்பு

ராப்பத்து திருவிழாவில் முதல் நாளான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும், சயன திருக்கோலத்தில் சுவாமி பொலிந்து நின்றபிரான் மதியம் 1.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர், கோவிலில் வழக்கம் போல் திருவிழா நடைபெற வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) உண்ணாவிரத போராட்டமும், நாளை (வெள்ளிக்கிழமை) முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்தனர்.

சமாதான கூட்டம்

இதை தொடர்ந்து ஏரல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் செயல் அலுவலர் அஜித், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் வாபஸ்

கூட்டத்தில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சயனத் திருக்கோலத்தில் தரிசன நேரம் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை எனவும், சொர்க்கவாசல் திறக்கும் நேரம் இரவு 10.30 மணி எனவும் முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பா.ஜ.க.வினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.


Next Story