பராமரிப்பில்லாத அமராவதி ஆற்றுப் பாலம்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் மரங்கள் முளைத்து உறுதித் தன்மை இழப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கனரக வாகனங்கள்
மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர்-திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக் கோடு போல அமராவதி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் மேல் பழமையான பாலம் உள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் தினசரி இந்த பாலத்தின் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அருகாமை கிராமங்களின் முக்கிய போக்குவரத்து வழித் தடமாகவும் இந்த பாலம் அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த பாலத்தில் போதிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் படிப்படியாக சேதமடைந்து உறுதித் தன்மை இழந்து உடைந்து விழும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மண் குவியல்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
அமராவதி ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டில் ஆங்காங்கே மரங்கள் முளைத்துக் கிடக்கிறது.இந்த மரங்களின் வேர்கள் ஊடுருவிச் செல்வதால் பக்கவாட்டுச் சுவர்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது.சிறிய செடியிலேயே அவற்றை அகற்றாமல் விட்டதால் ஆழமாக ஊடுருவியுள்ள வேர்களை அகற்றுவது கடினமான விஷயமாக இருக்கக் கூடும். இருந்தாலும் அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தின் மேல் இரு கரைகளிலும் மண் குவியல் அதிக அளவில் உள்ளது. அதில் ஏராளமான புற்கள் மற்றும் புதர்ச் செடிகள் முளைத்துள்ளது. இதனால் மழைநீர் வெளியேறும் வழித் தடங்கள் அடைக்கப்பட்டு மழைநீர் சீராக வெளியேற முடியாத நிலை உள்ளது.
எனவே பாலத்தின் மீது ஆங்காங்கே தேங்கும் மழைநீர் படிப்படியாக பாலத்தினுள் இறங்கி அதன் உறுதித் தன்மையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. இது விபத்துகளுக்கு வழிவகுக்கக் கூடும். எனவே அமராவதி ஆற்றுப் பாலத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாலத்தின் மீது விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே பாலத்தின் மீது விளக்குகள் மற்றும் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையிலான ஒளி பிரதிபலிப்பான்கள் போன்றவற்றையும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.