படிப்படியாக பாழாகும் அமராவதி ஆறு
படிப்படியாக பாழாகும் அமராவதி ஆறு
போடிப்பட்டி
கொழுமம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆறு படிப்படியாக பாழாக்கப்பட்டு வரும் நிலையில் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் ஆதாரம்
ஆண் பொருநை, அமரலோக நதி என்று அழைக்கப்படும் அமராவதி ஆறு காவிரியின் கிளை நதிகளில் ஒன்றாகும்.ஆற்றங்கரை நாகரிகம் வளர்ந்த காலம் தொட்டு உருவான கிராமங்கள், பழம்பெருமை வாய்ந்த கோவில்கள் என்று ஏராளமான பெருமைகளை தன்னுள் கொண்டுள்ளது. அமராவதி அணையிலிருந்து புறப்பட்டு கொழுமம் பகுதியில் குதிரை ஆற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டு நீண்ட பயணத்தில் ஏராளமான வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு, கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக மட்டுமல்லாமல் ஆயக்கட்டு பகுதிகளின் பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அமராவதி ஆறு ஒருசிலரின் அலட்சியப்போக்கால் படிப்படியாக பாழாக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுகாதார சீர்கேடுகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அமராவதி ஆறு மட்டுமல்லாமல் பல நீராதாரங்களை பாதுகாப்பதில் அலட்சியப் போக்கு நீடித்து வருகிறது. பல கிராமங்களின் கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது.மேலும் பல இடங்களில் ஆற்றங்கரையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவதும், திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதும் நடைபெற்று வருகிறது. அத்துடன் ஒருசில பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் பன்றிகள் சுதந்திரமாக உலா வருகின்றன.இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.பல கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள நீரில் கழிவுகள் கலப்பதால் மக்கள் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
படித்துறை
அமராவதி ஆற்றை முறையாக தூர் வாராததால் பல இடங்களில் புதர் மண்டிக் கிடக்கிறது.இதனால் நீரோட்டம் தடைபட்டு பெருமளவு நீர் வீணாகி வருகிறது.குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய தரைமட்டப் பாலத்தில் வாகனங்களை நிறுத்தி அவற்றை கழுவுகின்றனர்.இதில் லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனங்களும் கழுவப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் கழுவப்படுவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.இதுதவிர துணி துவைப்பது, துணிகளை ஆற்றில் வீசி எறிவது, உரச் சாக்குகளைக் கழுவுவது என்று பலவகைகளில் மாசுபடுத்தப்படும் அமராவதி ஆற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். நதிகள் என்பவை குடிநீர் ஆதாரம் மட்டுமல்லாமல் புனிதமாக வணங்கப்பட்ட வேண்டியவை என்பதால் தான் ஆற்றங்கரைகளில் கோவில்கள் கட்டி படித்துறைகள் அமைத்துள்ளனர்.ஆனால் ஒருசில பகுதிகளில் படித்துறைகளே பராமரிப்பில்லாமல் பாழாகி வருகிறது.எனவே அமராவதி ஆற்றை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.