அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியது
போடிப்பட்டி
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பராமரிப்புப் பணிகள்
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெருமைக்குரிய இந்த ஆலை தற்போது பல்வேறு சிரமங்களுக்கிடையில் இயக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தை அரவைப் பருவமாகக் கொண்ட இந்த ஆலை தற்போது 3 மாதம் முழுமையாக இயங்கினால் போதும் என்ற நிலையிலேயே உள்ளது. கடந்த ஆண்டில் அரவைப் பருவத்தின் போது பல முறை எந்திரங்கள் பழுது ஏற்பட்டு அரவை தடைபட்டது. ஆலையில் முழுமையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ. 30 கோடிக்கு மேல் தேவைப்படும் நிலையில் தற்போது ரூ. 10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் அதிகாரிகள் முழுமையான ஈடுபாட்டுடன் மில் ஹவுஸ், பாய்லர் போன்ற அத்தியாவசிய தேவையுள்ள பணிகளை மேற்கொண்டுள்ளனர். எனவே அரவை தாமதமாக தொடங்கினாலும் தடையில்லாமல் சீராக இயங்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இலக்கு நிர்ணயம்
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் ஆலைக்கு கரும்பு வழங்கி வருகின்றனர். நடப்பு ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ஆதார விலையான டன் ரூ. 2823.25 மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ. 195 சேர்த்து டன்னுக்கு ரூ. 3018.25 வழங்கப்படுகிறது.
இதில் வெட்டுக்கூலி விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்டு வெட்டாட்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் 667 விவசாயிகளிடமிருந்து 1,727 ஏக்கர் கட்டை கரும்பு, 464 ஏக்கர் கன்னி கரும்பு என மொத்தம் 2,191 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அலங்காநல்லூர் பகுதியிலிருந்து கரும்பு பெறப்பட்டு அரவை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரும்பு வெட்டுவதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து 90 குழுக்கள் அழைத்து வரப்பட்டுள்ளது.
ஆலைக்கு கரும்பு கொண்டு வரும் பணியில் 50 லாரிகள், 100 மாட்டு வண்டிகள் ஈடுபடவுள்ளது.தினசரி 1200 டன் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த மாதம் 10 -ந் தேதி இளஞ்சூடு ஏற்றும் விழா நடைபெற்ற நிலையில் 21-ந் தேதி அரவை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பராமரிப்பு ப்பணிகள் இழுபறியானதால் நேற்று காலை அரவை தொடங்கியுள்ளது. அரவைப் பணிகளை விவசாயிகள், அதிகாரிகள் இணைந்து, எந்திரத்தில் கரும்பைப் போட்டு தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் ஆலையில் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் சண்முகவேல், கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலதண்டபாணி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.கரும்பு அரவை தாமதமாகி வந்தநிலையில் நேற்று அரவை தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.