கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாருக்கு சாம்பாரில் விஷம் கலந்து கொன்றது அம்பலம் -மருமகள் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாருக்கு சாம்பாரில் விஷம் கலந்து கொன்றது அம்பலம் -மருமகள் கைது
x

விருத்தாசலம் அருகே மாமனார், மாமியார் உள்பட 3 போ் இறந்த வழக்கில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மருமகளே சாம்பாரில் விஷம் கலந்து கொன்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடா்பாக 1½ ஆண்டுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் மருமகளை போலீசாா் கைது செய்துள்ளனா்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கொளஞ்சியம்மாள் (55). இவர்களது மகன் வேல்முருகனுக்கும், விருத்தாசலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகள் கீதா(33) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு அகிலேஷ்வர் (12), சரவணகிருஷ்ணன் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் பக்ரைனில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு வேல்முருகன் கடந்த 2021-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

வாந்தி-மயக்கம்

இந்தநிலையில் கடந்த 29.12.2021 அன்று கொளஞ்சியம்மாள் தனது வீட்டில் முள்ளங்கி சாம்பாருடன், உணவு சமைத்து வைத்துவிட்டு வயலுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பியவுடன் தனது கணவர் சுப்பிரமணியன், பேரன் சரவணகிருஷ்ணன், மகன் வேல்முருகன் ஆகியோருடன் அமர்ந்து சாப்பிட்டார்.

அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவருடைய மகன் நித்தீஷ்வரன் (8), மகள் பிரியதர்ஷினி (4) ஆகியோரும் உணவு சாப்பிட்டனர். அதன் பிறகு சில நிமிடங்களில் கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், சரவணகிருஷ்ணன், நித்தீஷ்வரன், பிரியதர்ஷினி ஆகியோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து 3 போ் சாவு

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொளஞ்சியம்மாள் கடந்த 4.1.2022 அன்றும், சுப்பிரமணியன் அதற்கு மறுநாளும், நித்தீஷ்வரன் 7.1.2022 அன்றும் என அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அப்போது நித்தீஷ்வரன் உள்ளிட்ட 3 பேரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு

இதுகுறித்து வேல்முருகன், பிரபு ஆகியோர் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், 3 பேர் பலியான விவகாரத்தில் கீதா மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் இவ்வழக்கில் போலீசார் விசாரணையை முன்னெடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுக்கும் மேலான நிலையில் தற்போது தான் துப்பு துலங்கி உள்ளது.

விஷம் கலந்த முள்ளங்கி சாம்பாா்

அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், கீதாவுக்கு விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரிகரன்(43) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கொளஞ்சியம்மாள், அதுபற்றி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த வேல்முருகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கீதா, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய மாமியாரை கொலை செய்ய முள்ளங்கி சாம்பாரில் விஷத்தை கலந்துள்ளாா்.

ஆனால் அதனை சுப்பிரமணியனும், பக்கத்து வீட்டு சிறுவனும் சாப்பிட்டு உயிரிழந்ததும், வேல்முருகன் ரசம் ஊற்றி சாப்பிட்டதால் அவா் உயிர்தப்பியதும் தெரியவந்தது.

மேலும் விஷம் கலந்த உணவை குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் சாப்பிட்டதை வேடிக்கை பார்த்ததுடன், தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் கீதா நாடகமாடியதும் தெரியவந்தது.

கள்ளக்காதலனுடன் கைது

இதையடுத்து கீதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலன் ஹரிகரன் ஆகியோரை போலீசாா் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story