கல்லால் அடித்துக்கொன்றது அம்பலம்


திருமருகல் அருகே வயலில் பிணமாக கிடந்த முதியவரை கல்லால் அடித்துக்கொன்றது அம்பலமானது. ரூ.5 ஆயிரம் கடன் தராததால் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே வயலில் பிணமாக கிடந்த முதியவரை கல்லால் அடித்துக்கொன்றது அம்பலமானது. ரூ.5 ஆயிரம் கடன் தராததால் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வயலில் பிணமாக கிடந்த முதியவர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவருடைய மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு விஸ்வநாதன், கலையரசன் என்ற மகன்கள் உள்ளனர். கணேசன் வெள்ளரசி திடல் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலில் நடைபெறும் பணிகளை மேற்பார்வை செய்து வந்தார். இரவு நேரங்களில் அந்த வயலில் உள்ள மின்மோட்டார் அறையில் அவர் தூங்குவது வழக்கம்.

கடந்த 28-ந் தேதி இரவு வழக்கம் போல் அவர் மின் மோட்டார் அறையில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை வயலில் கணேசன் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.உடல் சேற்றில் புதைந்த நிலையில் இருந்துள்ளது .மேலும் அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருந்தது.

கல்லால் அடித்துக்கொலை

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக ஆதலையூர் மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வபிரகாஷ் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கணேசனை கல்லால் அடித்துக்கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கடன் கேட்டு தகராறு

கணேசன் சம்பவத்தன்று இரவு வயலில் உள்ள மின்மோட்டார் அறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த செல்வபிரகாஷ், கணேசனிடம் பேச்சிக்கொடுத்துள்ளார். இதில் அவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அவர், தனக்கு பணம் தேவைப்படுவதால் ரூ.5 ஆயிரம் கடன் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கணேசன் கூறியுள்ளார்.

இதை நம்பாமல் செல்வபிரகாஷ் மோட்டார் அறைக்கு சென்று பணம் எங்கு உள்ளது என தேடிபார்த்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வபிரகாஷ் கணேசனை கல்லால் அடித்துக்கொலை செய்து உடலை வயலில் வீசி விட்டு் சென்றுள்ளார். இ்வ்வாறு போலீசார் கூறினர்.

கைது

இதை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி செல்வபிரகாசை கைது செய்தனர். ரூ.5 ஆயிரத்திற்காக முதியவரை வாலிபர் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story