பொது சிவில் சட்டம் குறித்து அம்பேத்கர் பேசிய நாடாளுமன்ற உரையை முதல்-அமைச்சருக்கு அனுப்புவோம்;ஈரோடு பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
பொது சிவில் சட்டம் குறித்து டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசிய உரையை ஒரு லட்சம் பிரதி எடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்புவோம் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பொது சிவில் சட்டம் குறித்து டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசிய உரையை ஒரு லட்சம் பிரதி எடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்புவோம் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு, தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்ப வாரிசுகளுக்கு ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார். நரிக்குறவ சமுதாய மக்களையும் அவர் மேடையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பெருமிதம்
பின்னர் அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
ஈரோட்டில் இருந்து அரசியல் மாற்றம் தொடங்குகிறது. இந்தியாவில் 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடியால் ஒவ்வொரு திட்டங்கள் வழியாகவும் தொடப்பட்ட மக்கள் இந்த கூட்டத்துக்கு வந்து இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது இந்தியாவில் மக்களிடம் சமநிலை இல்லை. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்று அனைத்திலும் வேறுபாடு இருந்தது. அப்போது உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது நாடாக இருந்தது. 2022-ல் அது 5-வது இடத்துக்கு மாறி இருக்கிறது.
9 ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் இப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றதில்லை. இன்னும் 3 ஆண்டுகளில் ஜப்பான், ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்துக்கு வந்து விடும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கிறார்கள். லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு மத்திய ஆட்சியை கொடுக்க முடியும் என்று பிரதமர் 9 ஆண்டுகள் ஆட்சி செய்து காட்டி இருக்கிறார்.
3-வது முறை பிரதமர்
வருகிற 2024-ம் ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்கள் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவின் சிந்தாந்தம் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இன்று வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் நாட்டை விட்டு எத்தனை தொலைவில் இருந்தாலும் இந்தியன் என்பதை பெருமையாக உணர்கிறோம் என்று கூறுகிறார்கள்.
வெளிநாடுகளில் வசிக்கும் அனைவரும் தற்போது இரட்டை குடியுரிமை இந்தியாவில் கிடைக்குமா? என்று கேட்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். உலக நாடுகளும் மோடியை விலைக்கு வாங்க முடியாது என்று புரிந்து கொண்டார்கள். எனவே தான் வல்லரசு நாடுகளும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செலுத்துகிறார்கள். மிக நேர்மையான ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.
பொது சிவில் சட்டம்
முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது மக்களிடம் சமநிலை வரவேண்டும் என்று முதலில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு 886 நாட்களில் மின்சார இணைப்பு வழங்கினார். இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவேன் என்கிறார். கண்டிப்பாக கொண்டு வருவார்.
1956-ம் ஆண்டிலேயே இந்துக்கள் பொது சிவில் சட்டத்துக்குள் வந்து விட்டோம். இந்து மதத்தில் ஒவ்வொரு பிரிவுக்கு ஒவ்வொரு கலாசாரம் இருந்தாலும் இந்து சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்படுகிறோம். அதுபோல் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் பொது சிவில் சட்டம். இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார்.
ஒரு லட்சம் பிரதிகள்
ஒரு முதல்-அமைச்சராக இருக்க தகுதி இல்லாதவராக அவர் உள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பேசிய உரையை தமிழில் மொழி பெயர்த்து முதல்-அமைச்சருக்கு ஒரு லட்சம் பிரதிகள் அனுப்புவோம்.
நாங்கள் இங்கே கீழ்பவானி பாசனம் தந்த தியாகி ஈஸ்வரனை நினைவுகூர்ந்து மேடையில் படம் வைக்கிறோம். ஆனால் தி.மு.க.வில் ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் புகழ் பாடுகிறார்கள். நாங்கள் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் பெயர் சூட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். நீங்கள் என்ன செய்தீர்கள். தமிழக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது.
மத அரசியல் எடுபடாது
முதல்-அமைச்சர் தனது கோபத்தை போக்க பா.ஜனதா தொண்டர்களை கைது செய்கிறார். கைதுகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். ஒவ்வொரு பா.ஜனதா தொண்டனும் ஜெயிலுக்கு சென்று திரும்பும் போது இன்னும் பிடிப்புடன் வருகிறான். எனவே இந்த கைதுகள் மூலம் பா.ஜனதா வளர்ச்சிக்கும், தொண்டனின் உறுதிக்கும் உதவி செய்கிறீர்கள். 2024-ல் மோடி மீண்டும் பிரதமர் ஆவதை உங்களால் தடுக்க முடியாது. பா.ஜனதாவின் சித்தாந்தத்துக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
சாதி வைத்து நீங்கள் செய்த அரசியலை மோடி ஏற்கனவே தகர்த்து விட்டார். இனி உங்கள் மத அரசியலும் எடுபடாது. பா.ஜனதா 400 தொகுதிகளில் வெற்றி பெறும். மோடியின் 9 ஆண்டு ஆட்சி 10-க்கு 10 புள்ளி என்றால், தி.மு.க.வின். 2 ஆண்டு ஆட்சி 10-க்கும் ஜீரோ. பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். தொண்டர்கள் அவற்றை ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.