கழுகுமலை அருகே டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதல்:டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம்


தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிக்கொண்ட விபத்தில் டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விவசாயி

கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா(வயது 62). விவசாயி. இவர் நேற்று காலை 7 மணியளவில் காலாங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து கழுகுமலைக்கு செல்வதற்காக டிராக்டரை ஓட்டி சென்றார்.

கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கழுகுமலை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் டிராக்டரின் பின் பக்கம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

3 பேர் படுகாயம்

இதில் டிராக்டர் நிலை தடுமாறி அருகே உள்ள ஓடையில் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த சுப்பையா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதேநேரத்தில் டிராக்டர் மீது மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் எதிர்புறம் உள்ள சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவரான கோவில்பட்டி ராஜீவ் நகர் 5-வது தெருவை சேர்ந்த கொண்டப்பன் மகன் நாகராஜ் (24), அதில் பயணம் செய்த தனியார் மருத்துவமனை டாக்டர் பிரசன்னாபிரவீன் (26) ஆகிய 2 பேரும் ஆம்புலன்ஸின் இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டு கழுகுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுப்பையாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் டாக்டர் பிரவீன், நாகராஜ் ஆகிய 2 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story