தேனி அருகே 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலி; தந்தை உள்பட 4 பேர் படுகாயம்
தேனி அருகே 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலியானார். அவரது தந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேனி அருகே 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் பலியானார். அவரது தந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
108 ஆம்புலன்ஸ்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே மணியை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மணி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணியுடன், அவரது மகள்கள் ஜெயா (55), விஜயா (52) ஆகியோர் வந்தனர். ஆம்புலன்சை கம்பத்தை சேர்ந்த குமார் (39) என்பவர் ஓட்டினார். டெக்னீசியன் ராஜாவும் (40) உடன் வந்தார்.
பெண் பலி
தேனி அருகே முத்துதேவன்பட்டி புறவழிச்சாலையில் அந்த ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தறிகெட்டு ஓடியது. ஒருகட்டத்தில் அந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. ஆம்புலன்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயகுரல் எழுப்பினர்.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் வந்த ஜெயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் குமார், ராஜா, மணி, விஜயா ஆகிய 4 பேரும் ஆம்புலன்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
4 பேர் படுகாயம்
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் பலியான ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, சாலையோரம் கவிழ்ந்த ஆம்புலன்ஸ் அப்புறப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.