சாலை தடுப்புகளால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாமல் அவதி
திருப்பத்தூர் நகரில் பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. எனவே சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சாலையில் இரும்பு தடுப்புகள்
திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுமார் 1½ லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு முக்கிய பிரதான சாலையாக திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோடு உள்ளன. இந்த சாலைகள் தற்போது வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோடு மற்றும் கிருஷ்ணகிரி மெயின் ரோடு முழுவதும் பேரிகார்டுகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சேலம் மெயின் ரோடு வரை திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருப்பத்தூர் ெரயில் நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மார்க்கெட், நகைக்கடை பஜார் செல்லும் வழி உள்ளது. சிறிது தூரத்தில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தீயணைப்பு நிலையம், தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வழியாக உள்ளது.
இவை அனைத்தும் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுக்கப்பட்டு விட்டதால் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையம் அருகே அல்லது ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுப்பேட்டை ரோடு அருகே சென்று சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் திருப்பத்தூர் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவசரத் தேவைக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்லும் சூழ்நிலை உள்ளது. அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ெரயில் நிலையம் ரோடு வழியாக வந்து மீண்டும் மெயின் ரோடு சென்று பஸ் நிலையத்தை அடைந்து சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஷேர் ஆட்டோக்கள்
திருப்பத்தூர்- வாணியம்பாடி, திருப்பத்தூர்- சேலம், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி பிரதான சாலையில் எங்குமே போக்குவரத்து சிக்னல் கிடையாது. மேலும் திருப்பத்தூர், புதுப்பேட்டை ரோடு, போலீஸ் நிலைய கூட்ரோடு, பஸ் நிலையம் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டும் எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பத்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷேர் ஆட்டோ நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிலையம் வழியில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அரசு ஆஸ்பத்திரி வழியாக செல்லும்போது, அந்தப் பகுதியில் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளதால் அவசர தேவைக்கு வழியில்லை. ஆகையால் அங்குள்ள காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றி, சாலையை அகலப்படுத்தி தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
வளர்ந்து வரும் திருப்பத்தூர் நகருக்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்தால் மட்டும் போதாது, அதற்கேற்ற வசதிகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.
வழி ஏற்படுத்த வேண்டும்
இது குறித்து சமூக ஆர்வலர் டி.சந்திரசேகர் கூறுகையில் திருப்பத்தூர் கச்சேரி சாலையில் டவுன் போலீஸ் நிலைய கூட்ரோடு அருகே இருந்து மெயின் ரோடு செல்லும் வழியும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வரும் நிலை உள்ளது. மேலும் கச்சேரி தெரு, செட்டித் தெரு, சாமி செட்டித் தெரு, புட்டப்பனார் தெரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் இருந்து வரும் பொது மக்கள் இந்த வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தடுப்புகளை அகற்றி இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
திருப்பத்தூர் நகராட்சி கடைகள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.மோகன் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்ட தலைநகரமாக மாற்றப்பட்ட பிறகு அனைத்துத் துறை அலுவலகங்களும் இங்கு வந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. திருப்பத்தூர் மிகச்சிறிய ஊர். ஆகையால் பிரதான சாலைகளான திருப்பத்தூர்- வாணியம்பாடி, திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்- சேலம் ஆகிய சாலைகளில் செல்வது மிக சிரமமாக உள்ளது. போக்குவரத்து போலீசாரும் மிகக் குறைவாக உள்ளனர். சிக்னல்களும் கிடையாது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. உடனடியாக திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே வாகனங்களை திருப்பி செல்வதற்கு இட வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். போக்குவரத்து சிக்கல்கள் அமைக்க வேண்டும் என்றார்.