மக்களின் நலனுக்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


மக்களின் நலனுக்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

மக்களை தேடி மருத்துவம்' என்று அறிவித்துவிட்டு மக்களை மருத்துவத்தை தேடி அலைய வைக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையிலேயே சிகிச்சை பெறுவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அற்புதமான திட்டம் தான் 'அம்மா மினி கிளினிக்'.

இந்த திட்டம் மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதனை முடக்கி, 'மக்களை தேடி மருத்துவம்' என்ற பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது அந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று மக்களுக்கு தெரியவில்லை. 'போனவங்க வரவே இல்லை'. 'முதல் நாள் மாத்திரை கொடுத்துவிட்டு போனவங்க, இப்பவரைக்கும் ஒருநாள் கூட திரும்ப வந்து செக் பண்ணல'. 'யாராவது கேட்டா அடிக்கடி வர்றாங்கனு சொல்ல சொன்னாங்க'. 'பக்கத்து வீட்டுக்காரங்கக்கிட்ட காசு கொடுத்து மாத்திரை வாங்கிட்டு வந்து தரச்சொல்லி சாப்பிட்டுகிட்டு இருக்கேன்'. 'பக்கத்துல இருக்குற நர்சுங்ககிட்ட கேட்டா, இது என் வேலை இல்லை. நீங்க போய் 'கேஸ்' கொடுங்கனு சொல்றாங்க'.

'முடக்குவாதத்துக்கு பிசியோதெரபி சிகிச்சைக்காக ஒருநாள் வந்து பார்த்துட்டு கணக்கு எழுதிட்டு, நீங்களே உடற்பயிற்சி பண்ணிக்கங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க'. இதுதான் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் மீதான மக்களின் இன்றைய புலம்பல்களாக இருக்கிறது. கடந்த 14 மாத கால தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. அரசின் பல்வேறு நலத்திட்டங்களையெல்லாம் முடக்கியதோடு, அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் பணியையே கண்ணும் கருத்துமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செய்து வருகிறது.

கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில், தனியார் ஆஸ்பத்திரிகள் பல இயங்காத நேரத்தில், இப்போதுள்ள அதே அரசு டாக்டர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவுக்கும் மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். அதே அரசு டாக்டர்கள் தான் இப்போதும் பணிபுரிகின்றனர். ஆனால் இன்று, அரசு ஆஸ்பத்திரிகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியுள்ளது.

வெற்று விளம்பரத்துக்காக 'மக்களை தேடி மருத்துவம்' என்று அறிவித்துவிட்டு, முதல்-அமைச்சரை வைத்து 'போட்டோஷூட்' நடத்திவிட்டு, மக்களை மருத்துவத்தை தேடி அலைய வைக்கும் போக்கை தி.மு.க. அரசு உடனடியாக கைவிடவேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் தொடங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story