சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி


சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி
x

‘‘நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் மூடப்படாது’’, என்றும், ‘‘எப்போதும் போலவே தொடர்ந்து செயல்படும்’’ என்றும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி அளித்தார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. மன்ற கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

அம்மா உணவகத்தால் ரூ.756 கோடி நஷ்டம்

கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.):- அம்மா உணவகம் நடத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு இதுவரை ரூ.756 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில அம்மா உணவகங்களில் மிக குறைந்த அளவிலேயே உணவுகள் விற்பனையாகிறது.

எனவே ரூ.500-க்கு குறைவாக விற்பனையாகக் கூடிய அம்மா உணவகங்களை மூடி விடலாம். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேறு ஏதாவது வேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்கலாமே... (தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரும் இந்த கருத்தை அப்போது வலியுறுத்தினர்)

தொடர்ந்து செயல்படும்

மேயர் பிரியா:- அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அதை குறிப்பிட்டால் அவை ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்தப்படும். அம்மா உணவகங்கள் இப்போது எப்படி செயல்படுகிறேதா, அதுபோலவே இனியும் செயல்படும். ஊழியர்களை பொறுத்தவரையில் தேவைப்பட்டால் அந்த பகுதி கவுன்சிலர்களே நியமித்துக்கொள்ளலாம்.

உரிய ஆலோசனை

ராஜசேகர் (அ.தி.மு.க.):- 600 சதுர அடிக்கு குறைவாக நிலம் வைத்திருப்போருக்கான சொத்து மற்றும் தொழில் வரி குறைக்கப்படுமா? மேலும் எனது வார்டில் இயங்கி வந்த மாநகராட்சி ஆஸ்பத்திரி இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. புதிய ஆஸ்பத்திரி கட்டப்படுமா?

மேயர் பிரியா:- இப்போதைய நிலையில் புதிய திட்டம் இல்லை. அதேவேளை வரிகள் குறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

டில்லிபாபு (காங்கிரஸ்):- எனது வார்டில் முல்லைநகர் சந்திப்பில் கேப்டன் கால்வாயில் கழிவுநீர் பிரச்சினைக்கு முடிவுகட்ட தடுப்பணை கட்ட வேண்டும். அதேபோல 37-வது வார்டில் செயல்படாமல் உள்ள சமூகநல கூடத்தை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

100 நாள் வேலை திட்டம்

ஜீவன் (ம.தி.மு.க.):- கழிவுநீர் இணைப்பை விரைவில் பெறும் வகையிலான 'அழைத்தால் இணைப்போம்' திட்டத்தில் இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும். குடிநீர் வாரியமோ, மின்சாரத்துறையோ சாலையை தோண்டும் அதுதொடர்பாக மாநகராட்சியின் தடையில்லா சான்று பெறும் நிலையை உருவாக்க வேண்டும்.

ரேணுகா (இந்திய கம்யூனிஸ்டு) :- 100 நாள் வேலை திட்டத்தில் அதிக பணியாளர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். நடுநிலைப்பள்ளிகளை தொடர்ந்து அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேயர் பிரியா:- 100 நாள் வேலை திட்டத்தில் மண்டல அதிகாரியிடம் பேசி பணியாளர்களை எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. காலை சிற்றுண்டி விவகாரத்தில் அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்படும்.

கழிவுநீர் கட்டமைப்பு

ஜெயராமன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) :- திருவொற்றியூரில் எண்ணூர், மணலி பகுதியை இணைத்து ஒரு ஆடுகள் வதை கூடம் (ஆட்டுத்தொட்டி) அமைக்கப்பட வேண்டும்.

கோபிநாத் (வி.சி.க.) :- மக்கள் அடர்த்திக்கு ஏற்றவாறு கழிவுநீர் கட்டமைப்புகளை மாநகராட்சி ஏற்படுத்தி தரவேண்டும். அதேபோல எனது வார்டில் ஏற்கனவே இருந்த அஞ்சுகம் அரசு பிரசவ ஆஸ்பத்திரி தற்போது செயல்படாமல் உள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும்.

மாநகராட்சி நிலம் இருந்தால்...

மேயர் பிரியா:- 'கவுன்சிலர் நிதியை பஸ் நிறுத்தங்கள் கட்டிக்கொள்ள பயன்படுத்தி கொள்ள அனுமதி இருக்கிறது. இதற்கான தடையில்லா சான்றை போக்குவரத்து கழகத்திடம் பெறவேண்டியதுதான் முக்கியம்.

கமிஷனர் ககன்தீப் சிங் பெடி:- 'கவுன்சிலர்களுக்கான நிதியை கல்வி, பூங்கா மற்றும் அடிப்படை வசதிகளுக்காக முதலில் செலவிடுங்கள். பஸ் நிறுத்தங்களை 2-வது விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். இது எனது அறிவுரை.

இதனை வரவேற்கும் விதமாக பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து மேஜையை தட்டி வரவேற்றனர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பிரியாணி கேட்ட கவுன்சிலர்கள்

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய சில கவுன்சிலர்கள் ஏரியா சபை கூட்டம் நடத்தினால் தங்களுக்கு செலவு அதிகமாகிறது என்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து மேயர் பிரியா, 'ஏரியா சபை கூட்டங்களை இனி சமூக நலக்கூடத்தில் இலவசமாக நடத்துங்கள். மாநகராட்சி சார்பில் சிற்றுண்டி வழங்குகிறோம்', என்றார். அப்போது 'பிரியாணி போடுவீங்களா?' என்று சில கவுன்சிலர்கள் குரல் எழுப்பியபோது சிரிப்பலை எழுந்தது.

* தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட வேண்டிய இலவச டி.வி. பெட்டிகள், பல பள்ளிகளில் தனி அறைகளில் வைக்கப்பட்டு உள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, 'அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்', என்று மேயர் பிரியா தெரிவித்தார்.


Next Story