டிரம்மில் இருந்த அம்மன் சிலை வெளியே இருந்ததால் பரபரப்பு
அவினாசி சுகாதார ஊழியர் வீதியில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் இருந்த அம்மன் சிலையை அங்குள்ள ஒரு கொட்டகையில் பெரிய டிரம்மில் தண்ணீர் நிரப்பி அதில் வைத்திருந்தனர். கருப்பராயன் சிலையை டிரம்மிற்கு வெளியே கொட்டகையில் வைத்து பூஜை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் கருப்பராய சுவாமிக்கு பூசாரி பூஜை செய்தார். பின்னர் பக்தர்கள்அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். பின்னர் 15 நிமிடம் கழித்து பூசாரி மீண்டும் கொட்டகைக்கு வந்து பார்த்தபோது தண்ணீர் டிரம் உடைந்து இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பட்டத்தரசி அம்மன் சிலை கருப்பராயன் சிலை அருகே இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை பார்த்து விட்டு சென்றனர். அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. யாரும் டிரம்மில் இருந்த அம்மன் சிலையை வெளியே எடுத்து வைத்தார்களா? என்று தெரிய வில்லை