அம்மாபேட்டை பகுதியில்சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்


அம்மாபேட்டை பகுதியில்சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
x

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

ஈரோடு

அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

சூறாவளிக்காற்றுடன்...

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, பட்லுார், மறவன்குட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் இரவு 7 மணி அளவில் சூறாவளிக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

2 ஆயிரம் வாழைகள்

இந்த மழையால் மறவன்குட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது. மேலும் இந்த மழை காரணமாக இரவு 1 மணி வரை அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பட்லூர் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூறாவளிக்காற்றால் சேதம் அடைந்த வாழைகளை பார்வையிட்டனர்.

மேலும் பட்லுார் நால்ரோடு பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு புளியமரம் ஒன்று முறிந்து விழுந்தது.

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் ஈரெட்டி தேவர்மலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது. இதனால் மலைப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரெட்டியில் இருந்து தேவர் மலை செல்லும் ரோட்டின் குறுக்கே உள்ள ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த பகுதியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 1 மணி நேரத்துக்கு பின்னர் ஓடையில் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'தற்போது இங்குள்ள ஓடையில் கட்டப்பட்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பணி மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. இதனால் மழைக்காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பாலம் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்மாபேட்டை - 54, தாளவாடி - 34.2, ஈரோடு - 23, பவானி - 10.8, குண்டேரிப்பள்ளம் அணை - 8.2, வரட்டுப்பள்ளம் அணை - 6.8, சென்னிமலை - 6.4, கோபிசெட்டிபாளையம் - 4.2, பெருந்துறை - 4, எலந்தைகுட்டை மேடு - 3.2, கொடிவேரி அணை - 3, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் அணை - 1.8


Next Story