எட்டயபுரம்கோவில்பட்டி கோவில்களில் சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்
எட்டயபுரம்கோவில்பட்டி கோவில்களில் சுப்பிரமணிய சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் கோவில்களில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி விழா
எட்டயபுரம் நடுவிற்பட்டி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. நிறைவாக நேற்றுமுன்தினம் இரவு திருக்கல்யாண விழா நடந்தது. இதனையொட்டி நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு சுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை திருமண வைபவ ஹோமம் நடந்தது. தொடர்ந்து 11 வகை சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சுப்பிரமணியசுவாமி- வள்ளி, தெய்வாவானை அம்பாள்களுக்கு காப்பு கட்டுதல், திருமண சடங்கு மற்றும் திருமாங்கல்யம் அணிவித்தல் நடந்தது. இவ்விழாவில் எட்டயபுரம் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், பிரசாதமாக வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் ஆற்றுப்பாலம் அருகில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்கள் கைகளில் காப்பு கட்டி, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் திருமாங்கல்ய தானம் செய்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி- வள்ளி, தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவ கலை பிரியா தலைமையில் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலிலும் 17-வது ஆண்டு கந்தசஷ்டி திருவிழா மற்றும் லட்சார்ச்சனை விழாவையொட்டி கார்த்திகேயர்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.