சிறுதானியங்கள் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் கடன்-கலெக்டர் சாந்தி தகவல்


சிறுதானியங்கள் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் கடன்-கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சிறுதானியங்கள் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உணவு சார்ந்த தொழில்

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-2021-ம் ஆண்டு முதல் 2024-2025-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மானியம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள் என்ற முறையிலும் மற்றும் அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும் செயல்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் உணவு பதப்படுத்தும் மற்றும் உணவு சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள தனி நபர், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. இதேபோன்று ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது.

தொழில் முதலீடு

இந்த திட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொழில் முதலீடு மற்றும் 90 சதவீதம் கடன் பெற்று அவற்றில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தர்மபுரியில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story