காரிமங்கலம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 262 பயனாளிகளுக்குரூ.2¾ கோடியில் நலத்திட்ட உதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகேமக்கள் தொடர்பு திட்ட முகாமில் 262 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி ஊராட்சி சுண்ணாம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 190 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, நலிந்தோர் குடும்ப நல உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பட்டா மாற்றம், வாரிசு சான்று, விதவை சான்றிதழ், மின்னனு குடும்ப அட்டை மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிரிராவிடர் மற்றும் பலங்குடியினர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தகுதியுள்ள பயனாளிகள்
மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பது மிகவும் சிரமமானதாகும். மேலும் அவர்களுக்கு காலவிரயமும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தொலைதூர பகுதிகளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்களை நடத்தி, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் சுண்ணாம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களில் அரசின் திட்டங்களை அறிந்து, அதன் கீழ் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக வழங்கப்படும்.
ராகி கொள்முதல்
தர்மபுரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக விவசாய பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. விவசாயிகளிடம் இருந்து ராகியை நேரடியாக கொள்முதல் செய்ய, ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ராகியை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.
முகாமில் தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தாசில்தார் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைவாணி, காரிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சாந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் மாது, ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.