'கூகுள்-பே' மூலம் வேறு நபருக்கு அனுப்பியதால் விவசாயி இழந்த ரூ.40 ஆயிரம் மீட்பு
கடமலைக்குண்டுவில் ‘கூகுள்-பே' மூலம் வேறு நபருக்கு அனுப்பியதால் விவசாயி இழந்த ரூ.40 ஆயிரம் மீட்கப்பட்டது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் முத்துக்காளை. விவசாயி. இவர் தனது மனைவி விஜயலட்சுமியின் வங்கிக்கணக்கிற்கு 'கூகுள்-பே' செயலி மூலம் ரூ.40 ஆயிரம் அனுப்பினார். ஆனால், தவறுதலாக அது வேறு ஒருவரின் கணக்கிற்கு சென்று விட்டது. இதை அறிந்த முத்துக்காளை, இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, தவறுதலாக அனுப்பிய பணம் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தின் வங்கிக்கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் நிர்வாகத்தை போலீசார் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். அதன்பிறகு ரூ.40 ஆயிரம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பணத்தை முத்துக்காளையிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று ஒப்படைத்தார். அப்போது சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி உடனிருந்தார்.