உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா
திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திட்டச்சேரி:
திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்திராபதீஸ்வரர்
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. பல்லவ மன்னனின் படைத்தளபதியாக இருந்து சிவத்தொண்டராக மாறிய பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம் இது.
சிறுத்தொண்டரின் சிவபக்தியை வெளிப்படுத்த பிள்ளைக்கனியமுது கேட்டு இறைவன் சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தி சிறுத்தொண்டருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காட்சியளித்த இத்தலத்தில், இறைவன் பிள்ளைக்கனியமுது கேட்ட ஐதீக நிகழ்வு, சித்திரை பரணி பெருவிழா அமுது படையல் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
அமுது படையல்
அதன்படி இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமுது படையல் விழா நேற்று முன்தினம் காலை தொடங்கியது.
விழாவையொட்டி உத்திராபதீஸ்வருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்துக்கு சாமி வெள்ளை சாற்றி புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இறைவனுக்கு சிறுத்தொண்டர் பிள்ளைக்கனியமுது படைத்த அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
பக்தர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான சிவபக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், கிராமமக்கள் செய்திருந்தனர்.