அ.ம.மு.க.ஆர்ப்பாட்டம்
திருச்சியில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளரும், மாநகர மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன், மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன் (புறநகர் வடக்கு), கலைச்செல்வன் (புறநகர் தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் பாசறை தலைவர் கவுன்சிலர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளரும், மாநகர மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன் பேசும்போது, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டு மக்கள் மீது எந்த சுமையும் கொடுக்காமல் மக்களை காப்பாற்றினார். அதற்கு நேர்மாறாக இந்த அரசு மின்சார கட்டணத்தை மிக கடுமையாக உயர்த்தி இருக்கிறது. மலைக்கோட்டையில் ரோப் கார் அமைப்பேன் என்று சொன்னார்கள். அறநிலையத்துறை அமைச்சரை கூட்டிக்கொண்டு போய் பார்த்தார்கள். ஆனால் இன்று அந்த தொகுதி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு கொடுத்து கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் எதுவும் கொண்டு வரவில்லை என்கிறார்கள். அவருடைய ஆட்சியில் தான் மணப்பாறை பகுதியில் காகித அட்டை தொழிற்சாலை, நவலூர் குட்டப்பட்டு தேசிய சட்டப் பள்ளி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நவலூர் குட்டப்பட்டு மகளிர் தோட்டக்கல்லூரி, சேதுராபட்டியில் தொழில்நுட்பக்கல்லூரி ஸ்ரீரங்கத்தில் காவிரி கரையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, யாத்திரிநிவாஸ், கொள்ளிடம் பாலம், ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் என பல ஆயிரம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, பகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.