சைக்கிளில் சென்று தபால் கொடுக்கும் ஒரு கையை இழந்த 80 வயது முதியவர்


சைக்கிளில் சென்று தபால் கொடுக்கும் ஒரு கையை இழந்த 80 வயது முதியவர்
x

ஒரு கையை இழந்த 80 வயது முதியவர், தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தபால் வினியோகம் செய்கிறார்

கோயம்புத்தூர்

கோவை

ஒரு கையை இழந்த 80 வயது முதியவர், தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று தபால் வினியோகம் செய்கிறார்.

ஒரு கையை இழந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமன் (வயது80). இவர், 1971-ம் ஆண்டு முதல் கிராமப்புற தபால் நிலையத்தில் பணியாற்றி, 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இதற்கிடையே கடந்த 1969-ம் ஆண்டு ஸ்ரீராமனை பசுமாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வலதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது நவீன சிகிச்சை இல்லாத தால் அவரது வலதுகை துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் செயற்கை கை பொருத்தி பார்த்து சரிவர வில்லை. ஆனாலும் அவர், தன்னம்பிக்கையுடன் ஒரு கையுடன் சைக்கிள் ஓட்ட தொடங்கினார்.

இதற்கிடையே ஸ்ரீராமன் குடும் பத்துடன் கோவைக்கு வந்து டி.வி.எஸ் நகரில் வசித்து வருகிறார்.

தபால் வினியோகம்

அவருக்கு ஓய்வூதியம் ஏதும் இல்லாத நிலையில், தபால் துறையில் தனக்கு இருந்த அனுபவத்தை கொண்டு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அன்று முதல் இன்று வரை தினமும் பல கிலோமீட்டர் தூரம் ஒரு கையால் பிடித்தபடி சைக்கிள் ஓட்டிச் சென்று வீடு, வீடாக கூரியர் தபால்களை வினியோகம் செய்து வருகிறார்.

80 வயது ஆனாலும் ஸ்ரீராமன், சாய்பாபாகாலனி, ஆர்.எஸ்.புரம் தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் சென்று தபால்கள் மற்றும் பார்சல்களை கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து முதியவர் ஸ்ரீராமன் கூறியதாவது :-

மனதில் தைரியம் இருந்ததால் எதையும் சாதிக்கலாம். எனக்கு உடலில் தெம்பும்,. மனதில் நம்பிக்கையும் இருக்கிறது. இதனால் இந்த வயதிலும் வேலை செய்து வருகிறேன்.

நோய் பாதிப்பு காரணமாக என் மனைவியால் நீண்டநேரம் நிற்க முடியாது. அவருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மருத்துவ செலவு ஆகிறது. மேலும் குடும்ப செலவையும் பார்க்க வேண்டியது உள்ளது.

வலதுகை இல்லாவிட்டாலும் மனம் தளராமல் தினமும் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வேலையை செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story