தட்டாங்கோவில் பாலத்தில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்


தட்டாங்கோவில் பாலத்தில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் தட்டாங்கோவில் பாலத்தில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் தட்டாங்கோவில் பாலத்தில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தட்டாங்கோவில் பாலம்

கோட்டூர் அருகே தட்டாங்கோவில் காசாங்குளம் இடையே கோரையாற்றின் குறுக்கே மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் அமைக்கப்பட்டு அதில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து மன்னார்குடியை நோக்கி வரும் வாகனங்கள் பாலத்தில் ஏறினால் எதிரே வரும் வாகனங்களும் தெரிவதில்லை. அந்த வகையில் ஆபத்தான ஒரு வளைவுடன் அந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து விபத்துகளில் உயிரிழக்கின்றனர்

கடந்த மாதம் 24-ந்தேதி குன்னியூரைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் அய்யப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற போது எதிரே மன்னார்குடியில் இருந்து வந்த அரசு பஸ் மோதியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.அதே போல் மறுநாள் பைங்காநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அதே இடத்தில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் அவர் உயிர் தப்பினார்.

கடந்த 26-ந் அதே இடத்தில் சேரியைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிரே வந்த வாகனம் மோதி உயிரிழந்தார். நேற்று அதே இடத்தில் கார் மோதி ஒரு வாலிபரின் கால் முறிந்தது. கோரையாற்று பாலத்தில் ஒரே இடத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

பல உயிர்களை காவு வாங்குகிறது

திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து வரும்போது அந்த பாலத்தில் ஏறினால் அதில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது அந்த இடம்தான் பல உயிர்களை காவு வாங்குகிறது..

எதிரே வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு முந்தி செல்லும் போது எதிரே வாகனங்களில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.

எச்சரிக்கை பலகை

விபத்து ஏற்படாமல் தடுக்க பாலத்தின் நடுவே ஒரு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். அல்லது பாலத்தில் இந்த வளைவு மிகவும் ஆபத்தானது கவனமாக செல்ல வேண்டும் என ஒரு எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைஎ டுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story