உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும்
சங்கீதவாடியில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆரணி
ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளுடன் அடுக்குமாடி கட்டிடம் கட்டவேண்டும் என கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கீதவாடி கிராம ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுப்பிரமணி மற்றும் கிராம மக்கள் மனு அளிக்க வந்தனர்.
அங்கு வருவாய் கோட்டாட்சியர் இல்லாததால் நேர்முக உதவியாளர் க.பெருமாளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில் சங்கீதவாடியில் 2017-18-ம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் ஏற்கனவே இருந்த 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. தற்பொழுது 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தரம் உயர்த்தப்பட்ட உயர் நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பிட வசதி, ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட 2½ ஏக்கர் அரசு நிலம் பள்ளி அருகே உள்ளது.
அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தினை பள்ளிகட்டிடம் கட்ட ஒதுக்கீடு செய்து தர வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து ஆரணி தாசில்தாரிடமும் கோரிக்கை மனு வழங்கினர்.