மன்னார்குடி-வடபாதிமங்கலத்திற்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும்
மன்னார்குடி-வடபாதிமங்கலத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
மன்னார்குடி-வடபாதிமங்கலத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதிய பஸ் வசதி இல்லை
கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள வடபாதிமங்கலம், பெரியகொத்தூர், குலமாணிக்கம், பழையனூர், நாகங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிகளை மாணவர்கள் சென்றடையும் வகையில் காலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாமல் உள்ளது. அதேபோல், பள்ளி முடிந்த பிறகும் மாலை நேரத்தில் மாணவர்கள் வீடு திரும்புவதற்கும் போதுமான பஸ் வசதி இல்லை என மாணவ-மாணவிகள் கூறுகின்றனர். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் பஸ்சில் அதிகப்படியான கூட்டம் இருக்கும்.
படிக்கட்டுகளில் தொங்கியபடி...
அப்போது, பள்ளி மாணவர்களுக்கு அரசு பஸ்சின் படிக்கட்டுகளில் மட்டுமே நிற்க இடம் கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு படிக்கட்டுகளில் ஏறி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதில், சில மாணவர்களுக்கு பஸ்சின் படிக்கட்டுகளில் கூட இடம் கிடைப்பதில்லை.
இதனால் அவ்வழியாக வரும் இரு சக்கர வாகனங்களை மறித்து அவர்களிடம் உதவி கேட்டு பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கெல்லாம் போதுமான பஸ் வசதி இல்லை என்பதே காரணம் என்று மாணவ-மாணவிகள் கூறுகின்றனர்.
கூடுதலாக இயக்க வேண்டும்
எனவே காலை 8 மணிக்கு வடபாதிமங்கலத்தில் இருந்து புறப்பட்டு மன்னார்குடி சென்றடையும் வகையிலும், அதேபோல மாலை நேரத்தில் மன்னார்குடியில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு வடபாதிமங்கலம் சென்றடையும் வகையிலும் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.