புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு கூடுதல் இடம் தேர்வு செய்ய வேண்டும்


புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு கூடுதல் இடம் தேர்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆணைக்காரன் சத்திரம் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு கூடுதல் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

ஆணைக்காரன் சத்திரம் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு கூடுதல் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி மன்ற கட்டிடம்

கொள்ளிடம் ரெயில் நிலையம் அருகே கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் நெடுஞ்சாலை மட்டத்தில் இருந்து இரண்டடி பள்ளத்தில் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாலையில் இருந்து பள்ளத்தில் இக்கட்டிடம் கட்டப்பட்டால் கட்டிடத்துக்குள் வந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கும். மேலும் இக்கட்டிடம் குறுகிய இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் உள்ளன. அவை அனைத்தும் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதால், அந்த இடத்தை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் இடம் வேண்டும்

கொள்ளிடம் ஒன்றியத்திலேயே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது. சுமார் 15ஆயிரம் பேர் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சிக்கு 15 வார்டு உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். அதிக வருவாயையும் கொண்ட ஊராட்சியாக ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி இருந்து வருகிறது.

ஆனால் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மிக குறுகிய இடத்திலும் நெடுஞ்சாலை மட்டத்திலிருந்து இரண்டடி பள்ளத்திலும் கட்டப்பட்டு வருவதால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிக்கு இந்த இடம் போதுமானதாக இல்லாததால் கூடுதலாக வேறு இடத்தை தேர்வு செய்து, மற்றொரு கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story