24 வார்டுகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு
கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தலைவர் செல்லத்துரை கூறினார்.
கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் நாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் வருமாறு:-
கணேசன் (தி.மு.க.):- நகரில் தினசரி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எத்தனை வாகனங்கள் குப்பை அள்ளுவதற்கு தயாராக உள்ளது.
ஆணையாளர்:- குப்பைகள் அள்ளுவதற்கு மொத்தம் 15 வாகனங்கள் உள்ளன. கொரோனா நோய்தொற்று காலத்தில் பல வாகனங்கள் தணிக்கைச் சான்று பெறப்படாத காரணத்தால் இயக்கப்படாமல் இருந்தன. தற்போது வாகனங்களுக்கு தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் தினசரி குப்பை அகற்றும் பணி நடைபெறும்.
ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- ஏரியை சுற்றி பல்வேறு இடங்களில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- பிரையண்ட் பூங்கா, பென்டர்லாக் ரோடு, ஜிம்கானா ஆகிய இடங்களில் தற்காலிக நடமாடும் கழிப்பறைகள் அமைக்க ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டர்னர்புரம், ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா உட்பட 4 இடங்களில் ரூ.1 கோடியே 18 லட்சம் செலவில் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அருள்சாமி (தி.மு.க.):- நகர் பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்
தலைவர்:- நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கும் தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும்.
ேமற்கண்டவாறு கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றது. முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.