மோட்டார்சைக்கிளில் மகனுடன் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி
மோட்டார்சைக்கிளில் மகனுடன் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி நடந்ததில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த தாய்-மகன் இருவரும் மோட்டார்சைக்கிளில் செதுவாலை சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று வீடு திரும்பினர். மோட்டார்சைக்கிளை மகன் ஓட்டினார். பின்னால் தாயார் அமர்ந்திருந்தார். வேலூர் கருகம்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த பெண் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர்களை ஒரே மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.
தாய்-மகன் இருவரும் கருகம்புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் அருகே வாலிபர்கள் சென்று, அதில் ஒருவன் திடீரென அந்த பெண்ணின் செல்போனை பறிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். எனினும் அந்த வாலிபர் இழுத்ததில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி தாய்-மகன் இருவரும் கீழே விழுந்தனர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக வாலிபர்கள் 3 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். பின்னர் இருவரையும் பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.