வேகத்தடையில் அதிவேகமாக சென்ற மாநகர பஸ் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயம்
வேகத்தடையில் அதிவேகமாக சென்ற மாநகர பஸ் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மூதாட்டி பார்வதி (வயது 65). இவர் நேற்று முன்தினம் சிறுவாபுரியில் இருந்து சென்னை செங்குன்றம் நோக்கி மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பின் வரிசையில் கடைசி இருக்கையில் பார்வதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பஸ், பஞ்செட்டி அருகே சர்வீஸ் சாலையில் வேகதடை மீது செல்லும் போது, அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதில் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது மூதாட்டி பார்வதி இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் பஸ்சை கவனக்குறைவாக வேகமாக ஓட்டிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூதாட்டியின் உறவினர் கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.