விபத்தில் மின்வாரிய அதிகாரி பலி
விபத்தில் மின்வாரிய அதிகாரி பலியானார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் சீமான் (வயது 43). இவர் தேளூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தேளூர் துணை மின் நிலையத்தில் பணியை முடித்து விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னர் உடையார்பாளையம் வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கி கொண்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்த பாலு (60) என்பவர் ஓட்டி வந்த சைக்கிள் மீது சீமான் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சீமான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலுவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.