'செல்பி' எடுக்க முயன்ற வாலிபரை யானை துரத்தியது


செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை துரத்தியது
x

ஆசனூர் அருகே செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையை கடக்கும் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி இங்குள்ள திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி யானைகள் கடந்து செல்கின்றன.

அவ்வாறு சாலையை கடந்து செல்லும் யானைகளை அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். ஒரு சிலர் ஆர்வத்தால் செல்பியும் எடுக்கின்றனர்.

செல்பி எடுக்க...

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை காட்டு யானை ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக 25 வயது வாலிபர் ஒருவர் காரில் வந்தார். யானையை கண்டதும், அவர் காரை விட்டு இறங்கினார். பின்னர் யானையை புகைப்படம் எடுத்தார். மேலும் அவர் செல்பியும் எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை அந்த வாலிபரை துரத்த தொடங்கியது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று காரில் ஏறி உயிர் தப்பினார்.

தொந்தரவு செய்யக்கூடாது

இந்த காட்சியை மற்றொரு வாகனத்தில் வந்தவர் வீடியோவாக எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணத்தை கொண்டும், எந்த வனவிலங்குகளையும் தொந்தரவு செய்யக்கூடாது. மீறி செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


Next Story