கம்பத்தில் அழையா விருந்தாளியாக ஊருக்குள் புகுந்த 'அரிக்கொம்பன்' யானை; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
கேரளாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ‘அரிக்கொம்பன்' காட்டு யானை நேற்று அழையா விருந்தாளியாக கம்பம் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. வீதி, வீதியாக ஓடிய யானையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பாகன் வைத்திருக்கும் ஒற்றைக்குச்சிக்கு, எவ்வளவு பெரிய உருவம் அடங்கி இருக்கிறது என்று வளர்ப்பு யானையை பார்த்து நாம் வியந்து இருக்கிறோம். ஆனால் காடு, மேடு, மலையில் அலைந்து திரியும் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தால் எப்படி இருக்கும். அதனை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் நிலைகுலைந்து போய் விடும். அதன் கம்பீரம் நம்மை மிரள வைக்கும். உளிபோல் தோன்றும் விழியின் பார்வை பதற்றத்தை ஏற்படுத்தும். பிளிறும் சத்தம் நம்மை அலறியடித்து ஓட்டம் பிடிக்க செய்யும். அத்தகைய காட்டு யானை ஒன்று மிரண்டு ஊருக்குள் புகுந்து அங்கும், இங்குமாக உலா வந்து கம்பம் நகரையே நேற்று கதிகலங்க வைத்து விட்டது. அதன் விவரம் வருமாறு:-
'அரிக்கொம்பன்' காட்டு யானை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை இந்த யானை கொன்றதாகவும், ஏராளமான விளை பயிர்களையும் நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காட்டு யானை கடந்த மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினரால் மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது.
பின்னர் இந்த யானை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் கடந்த 30-ந்தேதி விடப்பட்டது.
லோயர்கேம்ப்பில் உலா
தமிழக-கேரள மாநில எல்லையான இப்பகுதியில் யானையை விடும் முன்பு அதன் கழுத்தில், ரேடியோ காலர் என்ற கருவி பொருத்தப்பட்டது. அதன்மூலம் யானையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
அப்போது அந்த யானை மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்து அந்த யானை, தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தது. அங்கு உலா வந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஹைவேவிஸ் மலைப்பகுதியிலும் தன்னுடைய அட்டகாசத்தை தொடர்ந்தது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. தொடர்ந்து அங்கேயே முகாமிட்டிருந்த அந்த யானை ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
பின்னர் அந்த யானை மலைப்பகுதி வழியாக கேரள மாநிலம் குமுளி பகுதிக்கு சென்றதாக கூறப்பட்டது. நள்ளிரவில் அந்த யானை கழுதைமேட்டுபுலம் பகுதியில் உலா வந்தது.
கம்பத்துக்குள் புகுந்தது
இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் அந்த யானை கழுதைமேடு ஓடை வழியாக இறங்கி, 18-ம் கால்வாய் கரையை கடந்து கம்பம்-கூடலூர் புறவழிச்சாலையோரம் ஒரு விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அதை பார்த்த விவசாயிகள் சிலர் கூச்சலிட்டனர்.
பின்னர் அந்த யானை அங்கிருந்து புறவழிச்சாலையை கடந்து கம்பம் நகருக்குள் புகுந்தது. அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தை கடந்து, டி.எஸ்.கே. நகருக்குள் வந்த யானை, அதன்பிறகு ஏகலூத்து சாலை, மின்வாரிய அலுவலக சாலை, நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெரு வழியாக ஓடியது.
கம்பம் நகர வீதிகளில் கம்பீரமாக நடந்து வந்த யானையை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் யானை வீதி, வீதியாக வழிதேடி ஓடியதை பார்த்த பொதுமக்கள் சிலர் யானையை பின்தொடர்ந்து துரத்தினர்.
விரட்டும் பணி
கம்பம் நகரில் புகுந்த யானையை கண்டதும் பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகளை பூட்டிக்கொண்டு, மொட்டை மாடியில் இருந்தும், ஜன்னல் கதவு வழியாகவும் யானையை பார்த்தனர். யானை ஓடிய வீதியெங்கும் பொதுமக்கள் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர், போலீசார் இணைந்து யானை இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு யானையை ஊருக்குள் இருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த யானை மின்வாரிய அலுவலகம் வழியாக சென்று அங்குள்ள ஒரு புளியந்தோப்புக்குள் புகுந்தது. காலை 10.30 மணியளவில் புளியந்தோப்புக்குள் சென்ற யானை அங்கேயே நீண்டநேரம் உலாவியது.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை-ஸ்ரீவில்லிப்புத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா ஆகியோர் கம்பத்துக்கு விரைந்து வந்தனர்.
144 தடை உத்தரவு
பின்னர் கம்பம் நகரில் 150-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். யானை இருந்த இடத்துக்கு பொதுமக்கள் வராமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கம்பம் நகருக்குள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பிற்பகல் 2.30 மணி அளவில் புளியந்தோப்பில் இருந்து யானை புறப்பட்டு, புறவழிச்சாலையை கடந்தது. பின்னர் சாலையோரம் உள்ள ஒரு வாழைத்தோப்புக்குள் புகுந்த யானை அதே பகுதியில் உலா வந்தது.
தொடர்ந்து யானையை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனால் புறவழிச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் ஊருக்குள் உள்ள சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. யானையை விரட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் பிறப்பித்தார்.
மக்கள் அச்சம்
இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கம்பம் நகருக்குள் வரும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஒலிபெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் வீதி, வீதியாக நகராட்சி ஊழியர்களும், போலீசாரும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக மக்களிடம் அறிவிப்பு செய்தனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
நகருக்குள் யானை புகுந்த சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யானை கம்பம் நகருக்கு அருகிலேயே முகாமிட்டுள்ளதால் மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.
டிரோன் பறக்க விட்ட யூடியூப்பரால் பரபரப்பு
கம்பம் நகருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானையை நகருக்குள் இருந்து வெளியேற்ற வனத்துறையினரும், போலீசாரும் உயிரை பணயம் வைத்து பணியாற்றினர். இதற்கிடையே காலையில் யானை உலா வந்த பகுதியில் டிரோன் பறக்கவிட்டு படம் பிடிக்கப்பட்டதாகவும், அதனால் அந்த சத்தம் கேட்டு யானை ஊருக்குள் ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், மின்வாரிய அலுவலகம் அருகில் புளியந்தோப்புக்குள் யானை தஞ்சம் அடைந்த போது, சின்னமனூரை சேர்ந்த யூடியூப்பர் ஒருவர் டிரோன் பறக்கவிட்டு யானையை படம் பிடிக்க முயன்றார். அந்த டிரான் சத்தம் கேட்டு யானை அங்கிருந்து மீண்டும் இடம் பெயர்ந்தது. இதையடுத்து டிரோன் பறக்க விட்ட நபரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிலர் சமூக வலைத்தளங்களில் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்பதற்காக யானையையும், யானை ஊருக்குள் நுழைந்த வழித்தடத்தையும் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அதுபோன்ற நபர்கள் சிலரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
காயங்களுடன் உலா வரும் அரிக்கொம்பன்
கம்பம் நகரில் நேற்று அரிக்கொம்பன் யானை உலா வந்தபோது அதன் தும்பிக்கை மற்றும் உடலில் காயங்கள் இருப்பதை காண முடிந்தது. மூணாறு அருகே சின்னக்கானலில் இருந்து மயக்கஊசி செலுத்தி அப்புறப்படுத்தப்பட்டு கண்ணகி கோவில் பகுதியில் விடப்பட்ட அந்த யானை அங்கிருந்து மீண்டும் சின்னக்கானல் செல்வதற்கு வழிதேடி அலைவதாக கூறப்படுகிறது. வண்ணாத்திப்பாறை, ஹைவேவிஸ், மணலாறு, மலைப்பாதை, மகாராஜாமெட்டு, லோயர்கேம்ப், குமுளி தற்போது கம்பம் என ஓய்வின்றி தினமும் யானை ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை யானை பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது. கம்பத்தில் இருந்து தேவாரம், சாக்குலூத்து மெட்டு வழியாக சென்றால் மீண்டும் நெடுங்கண்டம் வழியாக தனது பழைய வாழ்விடத்தை அடையவும் வாய்ப்புள்ளது. எனவே, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் அதே நேரத்தில், அதற்கு உரிய மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.