திருச்சி மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை திடீர் சாவு
உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை திடீரென உயிரிழந்தது.
உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை திடீரென உயிரிழந்தது.
யானைகள் மறுவாழ்வு முகாம்
திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு ஜமீலா என்ற 62 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 3 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உரிமைச்சான்று இன்றியும், வழித்தட சான்று இன்றியும் யானையின் உரிமையாளர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த யானை பல நாட்கள் நோய் வாய்ப்பட்டும், அதற்கு சரியான மருத்துவ சிகிச்சை செய்யாமலும் இருந்துள்ளதை மாவட்ட வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குழுவினரால் கண்டறியப்பட்டு, அதனை முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் சென்னை தலைமை வன உயிரினக்காப்பாளர் உத்தரவின்படி, திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து பராமரிக்கவும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், திருச்சி மாவட்ட வன அலுவலரை அறிவுறுத்தினார்.
திடீர் சாவு
இதன் தொடர்ச்சியாக மாவட்ட வனஅலுவலரால் அமைக்கப்பட்ட வன கால்நடை மருத்துவ குழுவின் மருத்துவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக யானையை பராமரித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவினால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பகல் 12.30 மணி அளவில் அந்த யானை பாகன்களின் கட்டளைக்கு இணங்க மறுத்து நிலைகுலைந்து உட்கார்ந்துவிட்டது. இது குறித்து உடனடியாக திருச்சி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழு விரைந்து வந்து யானையை பரிசோதித்ததில் யானை உயிரிழந்துவிட்டதாக பிற்பகல் 2.20 மணி அளவில் உறுதிப்படுத்தினர். மாவட்ட வன அலுவலர் தலைமையிலான வளர்ப்பு யானைகள் பராமரிப்புக்குழு முன்னிலையில் வன கால்நடை மருத்துவ குழுவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, யானையின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மாவட்ட வன அலுவலர் கோ.கிரண் தெரிவித்துள்ளார்.